Wednesday, January 14, 2009

508. சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'!

எச்சரிக்கை: இளகிய மனம் படைததவர்கள் இதை வாசிக்க வேண்டாம்!

புலிகளை மொத்தமாக ஒழித்துக் கட்டிய பிறகு, இந்த சிங்கள அரசு, தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்குமாம்! எப்படி? இக்கட்டுரையை வாசித்தால் புரியும். State Terrorism என்றால் இது தான் :-( தமிழக/மத்திய அரசுகளுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்? அதுவும் நமது ரா (RAW) ஆட்களுக்கு கொழும்பில் செல்வாக்கு அதிகம். தகவல்கள் நிறைய சேகரிக்கப்படுகிறது.

சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'!


.திருமாவேலன்

'கிழக்கில் உதயத்தை அனுபவிக்கிறார்கள் தமிழர்கள். வடக்கில் வசந்தத்தைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்!' - இது இலங்கையின் மாட்சிமை தங்கிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஈழத் தமிழ் மக்களுக்குச் சொல்லும் வரவேற்பு வார்த்தைகள்!

அத்தனையும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதைக் கடந்த வாரம் கொழும்பு வீதிகளில் ஒலித்த மரண ஓலங்கள் நமக்குச் சொல்கின்றன.
'என்னுடைய கணவனை ஒப்படை!', 'என் தந்தை எங்கே?' என்ற தட்டிகளுடன் பெண்களும் குழந்தைகளுமாக நின்று கூக்குரல் எழுப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள்.

இலங்கைச் சிறைகளில் நடக்கும் சித்ரவதைகள் உலகக் கொடுமைகளின் உச்சம். வெட்டுக் கத்தியால் கண்களைத் துளைத்தெடுத்து காலில் போட்டு மிதித்து சந்தோஷப்படும் கொடூரம், குட்டிமணி காலத்தில் தொடங்கியது. அடுத்து நகக்கண்ணில் ஊசியை நுழைப்பது, நகத்தையே பிடுங்குவது, தூங்கவிடாமல் அடித்துத் துவைப்பது, பனிக்கட்டியில் படுக்கவைப்பது, தலைகீழாகக் கட்டிவைத்து கீழே தீயைக் கொளுத்துவது, முள் படுக்கையில் உருட்டுவது எனத் தொடர்ந்தது. பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வார்த்தைகளின் எல்லைகளுக்குள் வராதவை. உடலையும் மனதையும் ஒருசேர நசிக்கும் சித்ரவதைகளை ஈழத்துப் பெண் எத்தனையோ ஆண்டுகளாக அனுபவித்து வருகிறாள். இலங்கையின் எல்லையைத் தனியாகப் பிரித்துத் தமிழீழம் ஆக்கப் போராடும் புலிகளையோ அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஆதரவாளர்களையோ கைது செய்ய, அவர்களிடம் இருந்து சில தகவலைப் பெற ராணுவம் முயற்சிப்பது பற்றிச் சமாதானம் சொல்லப்படலாம். மாறாக அப்பாவிகளை, அவர்கள் தமிழினத்தில் பிறந்து தொலைத்த ஒரே ஒரு பாவத்துக்காகப் பழிதீர்க்கக் கடத்திச் சென்று சித்ரவதை செய்வதும், அந்தக் குரூர நிமிடங்கள் முடிந்ததும் உயிரோடு கொளுத்திவிடுவதுமான அட்டூழியங்கள் இன்று அதிகமாகி வருகிறதாம்.

தமிழ் ஆட்களைக் கடத்திச் சென்று காலி செய்வதற்கென்றே கொழும்பில் தனி அணி இருப்பதாக மனித உரிமை அமைப்பினர் சொல்கிறார்கள். இந்த டீம் வரும் வாகனம் 'வெள்ளை வேன்'. ஊருக்குள் வெள்ளை வேன் வந்தாலே, யாரையோ கடத்தப் போகிறார்கள் என்று தமிழர்கள் பதற்றமடைகிறார்கள்; ஓடி ஒளிகிறார்கள். வேனில் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். நம்பர் பிளேட் இருக்காது. இதுதான் அந்த எமன் வாகனத்தின் அடையாளம். அதில் இருப்பவர்கள் ராணுவ, போலீஸ் உடைகளில் இருக்க மாட்டார்கள். சாதாரண உடுப் பில், ராணுவ மிடுக்குடன் இருப்பார்கள். 10 பேர் சேர்ந்து ஒருவரை நெட்டி முறுக்கி வேனுக்குள் ஏற்றும்போது, தட்டிக்கேட்க ரோட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். 'வெள்ளை வேன்ல வந்தவங்க எங்க அப்பாவைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க' என்ற புகார் காவல் நிலையங்களில் செல்லாது. தட்டிக்கேட்க யாரும் இல்லாததால், வெள்ளை வேன் கொடூரங்களுக்குத் தடையே இல்லை!
இப்படிக் கடத்திச் செல்லப்படுபவர்கள் மீது மேற் கொள்ளப்படும் விசாரணை சித்ரவதைகளின் கதையைக் கேட்டால், ரத்தம் சுண்டி இழுக்கும். அடிக்காமல், உதைக்காமல், அணுஅணுவாகக் கொன்று தீர்க்கிறார்கள். தன் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சித்ரவதைகள் பற்றி இலங்கைத் தமிழர் ஒருவர் பகிர்ந்துகொண்ட செய்திகள், 'கற்கால காட்டுமிராண்டித்தனம் இன்னமும் இலங்கையில் மட்டும்தான் கொடூரப் பரிணாமம் பெற்றிருக்கிறது' என்று சொல்லவைக்கிறது.

''30 வயது சத்யன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல வேலையில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தாங்க. தன் அடையாள அட்டையைக் காண்பித்தார் இவர். 'வழக்கமான சோதனைதான்' என்று சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ். அடுத்த வாரமே மீண்டும் வந்தார்கள், 'அதிகாரிகள் காத்திருக்காங்க!'ன்னு கூப்பிட்டாங்க. 'போன வாரமே விசாரணை முடிந்துவிட்டதே' என்று சத்யன் சமாளிக்கப் பார்க்க, ராணுவ உடுப்பில் இருந்த ரெண்டு பேர் உள்ளே வந்தாங்க. 'என்னமோ நடக்கப் போகுது' என்று சத்யனுக்குப் புரிஞ்சிருக்கு. உடை மாற்றிக்கொள்ளக்கூட விடாம, லுங்கி, டி-ஷர்ட்டுடன் அழைத்துப்போனாங்க. அப்போ மணி ராத்திரி 9 இருக்கும். வெளியே வந்த சத்யன் முன் பளீரெனக் காத்திருந்தது வெள்ளை வேன்!

கண்ணைக் கட்டியபடி 3 மணி நேரப் பயணம். ஒரு கட்டடத்தின் முன் வேன் நிற்க, சத்யனை உள்ளே இழுத்துட்டுப் போனாங்க. அவரை நிர்வாணமாக்கி ஒரு கல்லின் மேல் உட்காரவெச்சு, அவர் கைகளைப் பின்னாடி கட்டிட்டு விசாரணை ஆரம்பிச்சது. 'சொல்லு, உனக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?'னு முதல் கேள்வி. 'நான் கொழும்புல வேலை பார்த்துப் பிழைக்கிறவன். எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சத்யன் பதில் சொல்ல, அந்தக் கல்லோடு சேர்த்து அவரது ஆண் குறியின் முனையை பூட்ஸ் காலால் நசுக்கினாங்க. ரெண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால், அவரால எதுவும் செய்ய முடியலை. தனக்கு எதுவும் தெரியாதுன்னு கதறிட்டே இருந்திருக்கார்.

'இப்ப உனக்கு ஒரு செகண்ட் கரன்ட் ஷாக் கொடுப்போம். ரெண்டு செகண்ட் கொடுத்தா நீ செத் துடுவ'ன்னு சொல்லிட்டு, மின்சார வயரை சத்யனின் ஆண் குறியில் வெச்சிருக்காங்க. மிருதுவான அந்தப் பகுதி வழியா ஹைவோல்டேஜ் மின்சாரம் உடம்பில் ஊடுருவும் ஒவ்வொரு நொடியும் மின்சார நரகம். கரன்ட் பாய்ஞ்சு உடம்பு மொத்தமும் துடிக்கும்போது, ஒரு ரப்பர் பையை அவரது முகத்தைச் சுற்றிக் கட்டிஇருக்காங்க. அந்தப் பை முழுக்க பெட்ரோல். வலியால் வாயைத் திறந்து ஒருவன் கத்தும்போது, பெட்ரோல் வாசம் பிடிச்சா எப்படி இருக்கும்? அந்தச் சமயம் பெட்ரோல் வயித்துக்குள்ளே போவதையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மொத்த பெட்ரோலும் உள்ளே போயிருச்சு. அடுத்த ஒரு மணி நேரம் அவங்களுக்கு ரெஸ்ட். இவர் வேதனையில் துடிச்சிட்டு இருப்பாரு.

ரெஸ்ட் முடிஞ்சு வர்றாங்க. 'சொல்லு, கொழும்புல எங்கெல்லாம் குண்டு வெச்சிருக்கீங்க?' - இது ரெண்டாவது கேள்வி. 'எனக்குத் தெரியாது'ன்னு இவர் சொல்லவும், கால்ல கயித்தைக் கட்டி தலைகீழாத் தொங்கவிட்டிருக்காங்க. லிட்டர் லிட்டரா பெட்ரோல் குடிச்சவரைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கொஞ்சமா வாய், மூக்கு வழியா பெட்ரோல் ஒழுகுது. இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கு. அப்புறம் அவரைக் கீழே இறக்கி கை ரெண்டையும் பின்னாடி வெச்சு, ரெண்டு பெருவிரலை மட்டும் சேர்த்து கயித்துல முடிச்சுப் போட்டு மேலே தூக்கியிருக்காங்க. பின்பக்கம் கையை வளைச்சாலே வேதனை தாங்க முடியாது. ரெண்டு பெருவிரல் பலத்துல மொத்த உடம்பும் அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, எப்படி இருக்கும்? உடல் கனம் தாங்க முடியாம ரெண்டு பெருவிரலும் ஒடிஞ்ச பிறகுதான், அவரைக் கீழே இறக்கியிருக்காங்க. அதுக்கு மேலயும் கஷ்டத்தைத் தாங்குற சக்தி அவர் உடம்புல இல்லை. உயிர் எங்கோ ஒளிஞ்சுட்டு இருக்குற பிணமாக் கெடந்தார்.

திரும்ப வந்தவங்க ரெண்டு கையையும் கட்டி மறுபடியும் தூக்குறாங்க. அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிற மனநிலையில்கூட அவர் இல்லை. அவரோட ஆசன வாயில் பி.வி.சி. பைப்பைத் திணிச்சிருக்காங்க. வேதனையில அலறியிருக்கார். அடுத்து இரும்பு வேலிக் கம்பியைக் கையில் எடுத்திருக்காங்க. (இதற்கு மேலான விவரங்கள் மனவலிமை கொண்டவர்களையும் நொறுங்கச் செய்யும் என்பதால், அவற்றைத் தவிர்க்கிறோம்!)

இப்படி ரெண்டு ராத்திரிகளைச் சோறு தண்ணி இல்லாமக் கழிச்சிருக்கார். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது. குப்புறப் படுத்தா கரன்ட் ஷாக் கஷ்டம், நிமிர்ந்து படுத்தா வேலிக்கம்பி வேதனை. என்ன பண்ண முடியும்? ரெண்டாவது ராத்திரி அவருக்கு லேசாத் தூக்கம் வர்ற மாதிரி இருந்திருக்கு. அப்ப ஜில்லுனு ஐஸ் தண்ணியை ஊத்தியிருக்காங்க. தூக்கம் தொலைஞ்சு வேதனை வெடிச்சிருக்கு. எழுப்பி 'ஒரு நாள் ரெஸ்ட் எடு'ன்னு சொல்லி ஒரு இடத்துல வெச்சுப் பூட்டியிருக்காங்க. சவப்பெட்டி அளவுக்கான செல் அது. ஒரு ஆள் உள்ளே படுத்துக்கலாம். அசைய முடியாது, புரண்டு படுக்க முடியாது. இந்த மாதிரியான செமிட்டிக் செல் அங்கே நிறைய இருக்காம். படுத்திருக்கும் தளத்தில் கூர்மையான கல்லும் கண்ணாடித் துகள்களும் கொட்டிக்கிடக்குமாம். இந்தச் சித்ரவதையைத் தாங்கி உயிர் மிஞ்சுமா என்ன? வெள்ளை வேன்ல ஏறாததால நான் உங்க முன்னாடி பிழைச்சுக் கெடக்கேன்!'' என்று வேதனையும் விரக்தியுமாக வெதும்பினார் அவர்.

இன்னமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்ரவதைகள், ஹிட்லரின் நாஜி கேம்ப் கொடுமைகளைவிடக் கொடூரமானவை. வெள்ளை வேன் பயணம் மின்சார அடுப்பில் முடிவதாக மனித உரிமை அமைப்பினர் பயமுறுத்துகிறார்கள். இதில் பெண்கள் என்றால், பாலியல்ரீதியான சித்ரவதைகளுக்கும் அதிக முனைப்பு காட்டப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'கொழும்பில் புலிகளின் மனித வெடிகுண்டுகள் நடமாடுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் புலிகள் இன்னும் 'கெரில்லா' தாக்குதலை நடத்தி வருகிறார்கள்' என்பதுதான் தமிழ் இளைஞர்கள் மீதான இந்த விசாரணைகளுக்கான காரணங்கள்.

காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஆணையக் குழு உறுப்பினர் ராஜித் சேனாரட்சணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது போன்ற சித்ரவதைகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பூசா முகாமுக்கு ராஜித் சென்றார். அங்கு தமயந்தி என்ற பெண் தனது 6 மாதக் குழந்தையுடன் இருந்தார். 'என் வீட்டுல துப்பாக்கி இருந்ததாச் சொல்லி இங்கே அடைச்சிருக்காங்க. நான் துப்பாக்கியைப் பார்த்ததே இல்லை' என்றார். இரண்டு செல்போன் வைத்திருந்தார், அடையாள அட்டையில் கிளிநொச்சி என்று இருந்தது போன்றவை அவர் கைதுக்கான காரணங்கள். இதனால் எல்லாம்தான் உலகில் இராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமைகளை மீறும் இரண்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது போன்ற தகவல்களைத் திரட்டி வருகிறார் பி.யூ.சி.எல். அமைப்பின் தலைவர் வி.சுரேஷ். ''மனித உரிமை பிரச்னை தொடர்பாக உலகில் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பு .நா-வின் மனித உரிமை கமிட்டி. இதன் தலைவரான லூயி ஆர்பர், கனடா நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி. அவர் இலங்கை வந்தபோது, பல இடங்களைப் பார்க்க அந்த நாடு அவரை அனுமதிக்கவில்லை. 'மனித உரிமை மீறல்கள் இங்கு நிறுவனமயமாகிவிட்டன' என்று அவர் அறிவிக்கவும், அவரையே பயங்கரவாதி என்று இலங்கை சொல்லிவிட்டது.

.நா-வின் மனித உரிமைப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் இலங்கை போட்டியிட்டது. 'இலங்கைக்கு வாக்களிக்கக் கூடாது' என்று, அங்கிருந்தே செயல்படும் 8 மனித உரிமை அமைப்புகள் அனைத்து நாடுகளுக்கும் கடிதம் அனுப்பின. நோபல் பரிசு பெற்ற டெஸ்பான்ட் டுட்டு (தென் ஆப்பிரிக்கா), ஜிம்மி கார்க் (அமெரிக்கா), அடால்போ (அர்ஜென்டினா) ஆகிய மூவரும் அதே காரணம் சொல்லிக் கடிதங்கள் அனுப்பினார்கள். ஆனால், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வாக்கு அளித்தது. ஆனாலும், இலங்கை தேர்தலில் தோற்றது. இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், சிங்களமயமாக்கல், அடையாளங்களை அழிப்பது போன்றவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டி, உலகளாவிய பிரசார இயக்கத்தைத் தொடங்க எங்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. இவை அனைத்தையும் ஐ.நா. அமைக்கும் கமிட்டி விசாரணை நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!'' என்கிறார் சுரேஷ்.

'பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்பதற்கு நிகழ்கால உதாரணமாகத் திகழ்வதில், புத்தர் வாழ்ந்த பூமிக்கு என்ன பெருமையோ?

நன்றி: ஆனந்த விகடன்

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட்!

ILA (a) இளா said...

என்ன கொடுமையா இது?? இதையெல்லாம் கேட்க யாருமே இல்லியா??

said...

fantas(y)tic story writing... Vikatan group now writes everything from mount road office based on 10% hearing 90% earring...

said...

LTTE should have thought about all these before mavil aru misadventure.

said...

this things are real. I think the above anonymous is an 'allakkai' of sri lanka

said...

this is a news item in srilanka's daily mail paper.
Defence Secretary Gotabhaya Rajapaksa said yesterday that the Sri Lanka Military had attracted world attention due to the major victories gained in the war against LTTE terrorism and that the Indian National Security Advisor M.K. Narayanan had told him that Sri Lanka had the world’s best army commander
obviously,Mr.narayanan is praising srilankan army as the best in the world.
so, he thinks his own indian army commander is not that good.

said...

தமிழன் எதிர்கொள்ளும்ம் அவலத்தை ஒரு anonymous நாய் கேவலப்படுத்தி இருக்கிறது.இது போல போக்கறுந்ததுகள் தான் நாட்டுக்குகிடைத்தசாபக்கேடு,நாயே உன்க்குத் தெரியுமா 13 வயது பள்ளி மாணவனுக்கு குதத்துள்ளால் முள்ளுக்கம்பி விட்டு இழுத்த இழுவையில் குடல் அறுந்து இன்று வரை யாழ் வைத்தியசாலைல் கிடப்பதை...சீ

said...

ஆனந்த விகடன் இப்போது புலிகளின் பொய் பிரட்டு வெளியிடும் பிரசார யந்திரமாக மாறிவிட்டது.

said...

Mr.anony
how can you say this as 'poi and piraddu'. vikatan is telling the truth.
This has been happening in colomo,batticaloa,jaffna.vavuniya every where.
tamil people are scared of white van as they are scared of kiffir war flight.
some people say holocaust against Jews didn't happen.you are worse than those people.because they weren't jews,but some nazy Germans who deny holocaust,whereas you people are tamils and still saying this,when your own people are getting killed .
shame on you.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails